சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Sunday, June 11, 2006

 

எண்ணைக்காக என்னை ஏன்?...

தத்தெடுத்த தாயுடன் ஹூசைன்

கைகளால் காற்றில் தடவி நடப்பதை பழகிக்கொண்டுள்ள ஈராக்கைச் சேர்ந்த மூன்றே வயதான முஹம்மது ஹுசைன் 13 மாதங்களுக்கு முன்பு அமெரிக்க படைவீரர்களால் AK-47 ரக துப்பாக்கியால் குடும்பத்தினர் கொலை செய்யப்படும்போது, கொசுறாக முகத்தில் சுடப்பட்டதால் இரண்டு கண்களையும் இழந்தவன்.

இது ஈராக்கில் மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுதான். சமீபத்தில் UNICEF சமர்ப்பித்த ஆய்வறிக்கையின்படி ஈராக்கில் குழந்தைகளும், சிறுவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுவதும் கடத்தப்பட்ட பின்பு கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த 2003 போருக்குப்பின் நிலவும் அமைதியற்ற சூழலினால் வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் சாதாரண மக்களைக் கூட கலவரக்காரர்களாக்கியுள்ளது. நவம்பர் 2005 லிருந்து பிப்ரவரி 2006 வரையிலான கணக்கெடுப்பில் மட்டும் 417 பள்ளிகள் இந்த ரீதியில் தாக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

போரில் வானிலிருந்து நாடு முழுவதும் பொழியப்பட்ட அமெரிக்க குண்டு மழை ஏற்படுத்திய தாக்கத்தினால் அங்கக் குறைபாடுள்ள அவலட்சண பிறப்புகள் ஒரு பக்கம். விளையாடச் செல்லுமிடங்களின் முன்பு எப்போதோ வீசி வெடிக்காமல் போன cluster வகை குண்டுகளில் சிக்கி மடியும் குழந்தைகளின் கணக்கெடுப்பு இன்னும் முடியவில்லை என்பது இன்னொரு பக்கம்.

உங்கள் வீட்டில் பெரியவன் என்ன படிக்கிறான் சின்னவன் என்ன படிக்கிறான் என்று நாம் கேட்பது போல், கை இழந்தவர் யார் கால் இழந்தவர் யார் என்று பேசிக்கொள்வது எல்லாம் இங்கே சகஜம். ஹூசைன் போன்று ஆயிரக்கணக்கில் போரிலும் கலவரங்களிலும் பெற்றோரையும் தம் உடல் பகுதிகளையும் இழந்த சிறார்கள் இங்கே தெருவோரங்களில் பிச்சை எடுப்பதைக் கண்கூடாக பார்க்க முடியும்.

2003 ல் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மட்டும் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் கூறினாலும் ஒரு லட்சத்தைத் தாண்டிய பொதுமக்கள் ஊனமாக்கப்பட்டதால் நடைப்பிணமாக வாழ்கின்றனர் என்று அறிக்கைகள் நீள்கின்றன. அதில் 2 வயது குழந்தைகள் உள்பட 9.3 சதவீதம் சிறுவர்கள்.

அதில் முகம் சிதைந்த ஹுசைனுக்கு Healing the children தொண்டு நிறுவனத்தின் மூலம் வாஷிங்டனின் Seattle Swedish Medical Center ல் பணிபுரியும் ஈராக்கிய ஒஹானியன் என்பவரின் உதவியைக் கொண்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அன்றொரு நாளில் அமெரிக்க படைகள் ஈராக்கில் விளைவித்த பயங்கரங்களுக்குப் பரிகாரமாக அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் செய்யும் இச்சேவையும், ஹுசைனின் நிலையைக் கண்டு மனமிரங்கிய அமெரிக்க Julie Robinett Smith தம்பதியர் அவனைத் தத்தெடுத்துள்ளதும் ஆறுதல் அளிக்கும் விஷயங்கள்.

இப்போது ABC ஐயும் ஒன்று முதல் பத்து வரை எண்ணுவதையும் எண்ணி பூரிக்கும் அமெரிக்கத் தாய் ஹுசைன் சீக்கிரம் குணமடைந்து பார்வை பெறுவான் என்ற நம்பிக்கையுடன் பேசுகிறார். புது உலகத்தை அவனுக்குக் காண்பிப்பதில் உள்ள உத்வேகமும் உறுதியும் அவர் பேச்சில் தெரிகிறது. இச்சிறுவனுக்குள்ள ஒரே ஆறுதல் இத்தாயின் சர்வதேச மொழியான அரவணைப்பின் சுகம் மட்டும்தான்.

ஹூசைன் அடிக்கடி தாயிடம் கேட்பது "நான் எப்போது வளர்வேன், எப்போது பள்ளிக்குப் போவேன்" என்பது தானாம். ஆனால் காயப்பட்ட மனதில் வாழ்நாள் முழுவதும் தொக்கி நிற்கும் கேள்வி என்னவோ இப்பதிவின் தலைப்பு மட்டும்தான்.

எத்தனை வித அறுவை சிகிச்சைகள் தேவைப்படும், அப்படியும் கண்பார்வை கிடைப்பது சாத்தியமா என்பது மருத்துவ உலகத்திற்குக் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இச்சிறுவனுக்காக மொழி, மத பேதமற்று உலகின் பல்வேறு பாகங்களிலும் எழுந்துள்ள பிரார்த்தனை அலைகளில் நாமும் பங்கேற்போம்.