சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Sunday, June 11, 2006

 

எண்ணைக்காக என்னை ஏன்?...

தத்தெடுத்த தாயுடன் ஹூசைன்

கைகளால் காற்றில் தடவி நடப்பதை பழகிக்கொண்டுள்ள ஈராக்கைச் சேர்ந்த மூன்றே வயதான முஹம்மது ஹுசைன் 13 மாதங்களுக்கு முன்பு அமெரிக்க படைவீரர்களால் AK-47 ரக துப்பாக்கியால் குடும்பத்தினர் கொலை செய்யப்படும்போது, கொசுறாக முகத்தில் சுடப்பட்டதால் இரண்டு கண்களையும் இழந்தவன்.

இது ஈராக்கில் மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுதான். சமீபத்தில் UNICEF சமர்ப்பித்த ஆய்வறிக்கையின்படி ஈராக்கில் குழந்தைகளும், சிறுவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுவதும் கடத்தப்பட்ட பின்பு கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த 2003 போருக்குப்பின் நிலவும் அமைதியற்ற சூழலினால் வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் சாதாரண மக்களைக் கூட கலவரக்காரர்களாக்கியுள்ளது. நவம்பர் 2005 லிருந்து பிப்ரவரி 2006 வரையிலான கணக்கெடுப்பில் மட்டும் 417 பள்ளிகள் இந்த ரீதியில் தாக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

போரில் வானிலிருந்து நாடு முழுவதும் பொழியப்பட்ட அமெரிக்க குண்டு மழை ஏற்படுத்திய தாக்கத்தினால் அங்கக் குறைபாடுள்ள அவலட்சண பிறப்புகள் ஒரு பக்கம். விளையாடச் செல்லுமிடங்களின் முன்பு எப்போதோ வீசி வெடிக்காமல் போன cluster வகை குண்டுகளில் சிக்கி மடியும் குழந்தைகளின் கணக்கெடுப்பு இன்னும் முடியவில்லை என்பது இன்னொரு பக்கம்.

உங்கள் வீட்டில் பெரியவன் என்ன படிக்கிறான் சின்னவன் என்ன படிக்கிறான் என்று நாம் கேட்பது போல், கை இழந்தவர் யார் கால் இழந்தவர் யார் என்று பேசிக்கொள்வது எல்லாம் இங்கே சகஜம். ஹூசைன் போன்று ஆயிரக்கணக்கில் போரிலும் கலவரங்களிலும் பெற்றோரையும் தம் உடல் பகுதிகளையும் இழந்த சிறார்கள் இங்கே தெருவோரங்களில் பிச்சை எடுப்பதைக் கண்கூடாக பார்க்க முடியும்.

2003 ல் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மட்டும் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் கூறினாலும் ஒரு லட்சத்தைத் தாண்டிய பொதுமக்கள் ஊனமாக்கப்பட்டதால் நடைப்பிணமாக வாழ்கின்றனர் என்று அறிக்கைகள் நீள்கின்றன. அதில் 2 வயது குழந்தைகள் உள்பட 9.3 சதவீதம் சிறுவர்கள்.

அதில் முகம் சிதைந்த ஹுசைனுக்கு Healing the children தொண்டு நிறுவனத்தின் மூலம் வாஷிங்டனின் Seattle Swedish Medical Center ல் பணிபுரியும் ஈராக்கிய ஒஹானியன் என்பவரின் உதவியைக் கொண்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அன்றொரு நாளில் அமெரிக்க படைகள் ஈராக்கில் விளைவித்த பயங்கரங்களுக்குப் பரிகாரமாக அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் செய்யும் இச்சேவையும், ஹுசைனின் நிலையைக் கண்டு மனமிரங்கிய அமெரிக்க Julie Robinett Smith தம்பதியர் அவனைத் தத்தெடுத்துள்ளதும் ஆறுதல் அளிக்கும் விஷயங்கள்.

இப்போது ABC ஐயும் ஒன்று முதல் பத்து வரை எண்ணுவதையும் எண்ணி பூரிக்கும் அமெரிக்கத் தாய் ஹுசைன் சீக்கிரம் குணமடைந்து பார்வை பெறுவான் என்ற நம்பிக்கையுடன் பேசுகிறார். புது உலகத்தை அவனுக்குக் காண்பிப்பதில் உள்ள உத்வேகமும் உறுதியும் அவர் பேச்சில் தெரிகிறது. இச்சிறுவனுக்குள்ள ஒரே ஆறுதல் இத்தாயின் சர்வதேச மொழியான அரவணைப்பின் சுகம் மட்டும்தான்.

ஹூசைன் அடிக்கடி தாயிடம் கேட்பது "நான் எப்போது வளர்வேன், எப்போது பள்ளிக்குப் போவேன்" என்பது தானாம். ஆனால் காயப்பட்ட மனதில் வாழ்நாள் முழுவதும் தொக்கி நிற்கும் கேள்வி என்னவோ இப்பதிவின் தலைப்பு மட்டும்தான்.

எத்தனை வித அறுவை சிகிச்சைகள் தேவைப்படும், அப்படியும் கண்பார்வை கிடைப்பது சாத்தியமா என்பது மருத்துவ உலகத்திற்குக் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இச்சிறுவனுக்காக மொழி, மத பேதமற்று உலகின் பல்வேறு பாகங்களிலும் எழுந்துள்ள பிரார்த்தனை அலைகளில் நாமும் பங்கேற்போம்.


கருத்துக்கள்:
ஆக்கிரமிப்பு ராணுவங்கள் எங்கெல்லாம் கால் பதித்துள்ளனவோ அங்கெல்லாம் இவை நடக்கும். ஆனாலும் உலகம் அமைதி காக்கும்
 
அய்யா

இது என்ன சுவாரசியமான விஷயமா? நெஞ்சு பதைக்கும் விஷயம். படங்களைக் கண்ட போதே மனம் திக் என்கிறது!

தமிழ்சசி சொன்னதை இங்கே சொல்ல நினைக்கிறேன்

வேதனை எனும் இயலாமை தவிர வேறெதுவும் வரவில்லை.
 
உள்ளத்தை உருக்கும் பதிவு. நிழற்படம் நெக்குருகச் செய்கிறது.

பிரார்த்தனை மட்டுமே நம்மாலானது.
 
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கொழுவி!

தாங்கள் கூறுவது போன்று உலகம் அமைதி காத்திட வேண்டும் என்பதே என் ஆவலும் கூட. ஆனாலும் இதில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத இச்சிறார்கள் சின்னாபின்னமாகிப் போவதைக் கண்டு மனம் வெதும்புவதைத் தவிர மனிதம் என்ற அடிப்படையில் நாம் செய்வதொன்றுமில்லையா என்ன?
 
வரவுக்கும் தங்களின் கருத்துக்கும் நன்றி தி.ராஸ்கோலு!

//இது என்ன சுவாரசியமான விஷயமா?//

வலைப்பூவின் தலைப்பூ அப்படி வைத்துவிட்டதாலேயே பல சென்ஸிடிவ் விஷயங்களைச் சொல்லத் தயங்கியிருக்கிறேன்.

தவிர உங்களது வேதனையில் நானும் பங்கேற்கிறேன்.
 
வாருங்கள் அழகு!

பிரார்த்தனைக்கு நிகரான வலிமை வாய்ந்த விஷயம் இவ்வுலகில் எதுவுமில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் உங்களுடன் சேர்த்து நானும் பங்கேற்கிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
 
"சுவாரஸ்யமான விஷயம்" என முகப்பை கொடுத்திருப்பதால் ஏதாவது காமெடி செய்திருப்பீர்கள் என நினைத்து வந்தால் உண்மையாகவே அப்பாவி மக்களின் பிணத்தின் மேல் ஏறி நின்று கொக்கரிக்கும் புஷ்&பிளேருக்கு "சுவாரசியமான விஷயத்தையே" கொடுத்துள்ளீர்கள்.

படத்தைக் கண்ட பொழுது மனதில் எழுந்த வேதனை, ஏகாதிபத்தியவாதிகளின் கொடூர செயல்களின் விளைவினை படித்து முடியும் பொழுது மனதில் கோபமும் வெறுப்பும் இன்றி வேறெதுவும் மிஞ்சியிருக்கவில்லை.

இங்கே இருக்கும் நம் கோபத்தினையும் வெறுப்பினையும் தணிக்க இருக்கவே இருக்கிறது "பிரார்த்தனை" என்ற பெயரில் கையாலாகாத்தனம். இதனை நேரில் கண்டு அனுபவிக்கும் அந்நாட்டு சொந்தம் சகோதரர்களுடைய கோபத்தினையும் வெறுப்பினையும் தணிக்கவோ, "தீவிரவாதி" என்ற பெயருடன் "அபூ குரைப்"களும், "குவாண்டனமோ"க்களும்.

நவீன யுகத்தில் உலகை அடக்கியாள நினைக்கும் வல்லரசுகள் தங்களது எண்ணம் நிறைவேற என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எப்படியாவது இவ்வுலகில் பிரச்சினையில்லாமல் வாழ்ந்து விட நினைக்கும் நம் போன்றவர்கள் "பிரார்த்தனையின்" துணையுடன் கண்ணடைத்து வாழ்ந்து சென்று விடுவோம்.

ஒரு நிமிடம் சீரியசாகவே சிந்திக்க வைத்த உங்கள் பதிவுக்கு நன்றி. தொடர்ந்து வல்லரசுகளின் அழுகிய கோர முகங்களை வெளிப்படுத்த முனையுங்கள்.

வேதனை கலந்த வெறுப்புடன்
இறை நேசன்
 
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி இறைநேசன்,

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

பிரார்த்தனையை நீங்கள் வேண்டுமானால் கையாலாகாத்தனம் என்று எண்ணிவிடலாம். வரம்பு மீறுபவனுக்கு எதிராக, வலிமை குறைந்தவன் தூக்கும் ஒரே ஆயுதம் இதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?
 
//பிரார்த்தனையை நீங்கள் வேண்டுமானால் கையாலாகாத்தனம் என்று எண்ணிவிடலாம். வரம்பு மீறுபவனுக்கு எதிராக, வலிமை குறைந்தவன் தூக்கும் ஒரே ஆயுதம் இதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?//

சகோதரரே நீங்கள் கூறியிருப்பது வலிமை குறைந்தவனுக்கு.

யார் வலிமை குறைந்தவன் என்று சற்று தனிமையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

ஏகாதிபத்திய அநியாயக்காரர்களின் அனைத்து அடக்கு முறைகளையும் நேரடியாக அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்நாட்டு சகோதரர்கள் கூட தங்களை "வலிமையற்றவர்களாக" கருதாமல் "இறை நம்பிக்கையோடு" எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, அனைத்து வசதிகளையும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் "வலிமையற்றவனின்" ஆயுதமான "பிரார்த்தனையை" கையிலெடுப்பது கையாலாகாத்தனம் இல்லாமல் வேறென்ன?

"பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இறைவனை நோக்கி, யா இறைவா! எங்கள் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை எங்களுக்கு ஏற்படுத்தித் தருவாயாக!" என்று தங்கள் "இயலாமையை" கூறி "பிரார்த்திப்பதாக" இறைவன் தன் திருமறையில் கூறிக்காட்டுகிறான்.

இத்தகு வலிமையற்ற "முதியோர், நோயாளி, பெண்கள், குழந்தைகளாகவா" நாம் உள்ளோம் என்பதை, வலிமையற்றவர்களின் ஆயுதமான "பிரார்த்தனையை" கையிலெடுக்கும் கையாலாதவர்கள் மறுபரிசீலனை செய்து கொள்ளட்டும்.

இறை நேசன்.
 
சகோதரரே,

நான் முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொள்ளும் திருமறையையும் இறைவனின் கூற்றையும் மேற்கோள் காட்டி கூறியது, அது இரைவனின் படைப்புகள் அனைவருக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் தான்.

நான் சுட்டிக்காட்டியிருக்கும் திருக்குர்ஆனின் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் "வலிமையற்றவர்களை" கவனியுங்கள்.

ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அடக்குமுறைகளையும் இருக்க இருப்பிடம், அணிய உடை, சாப்பிட உணவு என எதுவுமின்றி எதிர்கொள்ளும் மக்கள் அல்லவோ "வலிமையற்றவர்கள்"?.

இந்த அடிப்படையிலேயே மனிதர்களின் இறைவன் "வலிமையற்றவர்களை" சுட்டிக்காட்டும் அந்த வசனத்தைச் சுட்டிக்காட்டினேன்.

நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அன்புடன்
இறை நேசன்
 
Post a Comment



<< Home